தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழுகுகள் மரணம்; விவசாயிகள் கால்நடைகளுக்கு சில மருந்துகளை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தமிழக அரசு சென்னை ஐக்கோர்டில் தெரிவிப்பு! - VULTURES DEATH CASE

VULTURES DEATH CASE: கழுகுகள் மரணத்துக்குக் காரணமாக உள்ள குறிப்பிட்ட சில மருந்துகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Madras High Court Photo
Madras High Court Photo (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 8:32 PM IST

சென்னை: கழுகுகள் மரணத்துக்குக் காரணமாக உள்ள குறிப்பிட்ட சில மருந்துகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளைச் சட்டவிரோதமாக விலங்குகளுக்குச் செலுத்துவதாகவும், மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்தபிறகு, அவற்றின் மாமிசத்தைச் சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழப்பதால், நான்கு மாவட்டங்களிலும் மூன்று மருந்துகளையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 1980ம் ஆண்டில் இந்தியாவில் நான்கு கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாகவும், இயற்கையின் சுகாதார பணியாளர்களான கழுகுகளைப் பாதுகாக்க, நான்கு மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில், கழுகுகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் 80 மையங்கள் அமைக்க உள்ளதாகவும், தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளை கழுகுகள் பாதுகாப்பு மையங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்ட போதும், இதுவரை எந்த கருத்துருக்களையும் அனுப்பவில்லை எனவும், கழுகுகளுக்கு ஆபத்தாக உள்ள மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், கழுகுகளைப் பாதுகாக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு, மத்திய அரசின் கழுகுகள் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருந்துகளைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கழுகுகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கழுகுகள் இனப்பெருக்கத்துக்காக அடைகாத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கழுகுகள் மரணத்துக்குக் காரணமாக உள்ள மருந்துகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:'ஆதிதிராவிடர் நலத்துறை' பெயரை மாற்றப் பரிந்துரை இல்லை - தமிழக அரசு சென்னை ஐக்கோர்டில் விளக்கம்! - Adi Dravidar welfare name change

ABOUT THE AUTHOR

...view details