திண்டுக்கல்: 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக நாளை (ஏப்.19) நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியிலும் 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்களும், புதுச்சேரியில் 10 லட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்களும் நாளை வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மலை நகரமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல முடியாத பல்வேறு கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, 400 வருடங்கள் பழமையாக உள்ள வெள்ளைகெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களுக்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், இன்று கொடைக்கானல் வழியாக வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.