சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 23 இலட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் மற்றும் புதுச்சேரியில் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
9 மணி வாக்குப்பதிவு நிலவரம்:காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடைபெற்று வருகிறது. அவற்றில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15.10 சதவிகித வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் 15.04 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதேநேரம் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், தென் சென்னையில் 10.08 சதவிகிதமும், வட சென்னையில் 9.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. சேலத்தில் 14.79 சதவிகிதம், கோயம்புத்தூரில் 12.16 சதவிகிதம், திருச்சியில் 11.82 சதவிகிதம் மற்றும் மதுரையில் 11.00 சதவிகித வாக்குகள் காலை 9 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளன.
11 மணி வாக்குப்பதிவு நிலவரம்:காலை 11மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவிகித வாக்குகளும், அடுத்ததாக திண்டுக்கல்லில் 26.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாமக்கல் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் விழுப்புரம் மக்களவை தொகுதியில் 25.69 சதவிகித வாக்குகள், ஈரோட்டில் 25.37 சதவிகிதம், மதுரையில் 22.73 சதவிகிதம், நீலகிரியில் 24 சதவிகிதம் மற்றும் தென்காசியில் 24.51 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.