தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; உரிமம் தற்காலிக ரத்து! - Virudhunagar Cracker factory

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழ ஓட்டம் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தீபாவளிக்காக தயாரித்து வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததால் பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வர 6 மணி நேரமாக சாத்தூர் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 5:13 PM IST

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள கீழ ஓட்டம் பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியைத் தொடங்குவதற்கு முன் மருந்து கலவைகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அந்த தீ தீபாவளிக்காக உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அறைகளில் வெடித்துச் சிதறவே வெடி விபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பற்றி எரிந்த தீ தொடர்ந்து 6 மணி நேரம் வெடித்துக் கொண்டே இருந்ததால், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தீயைக் கட்டுக்குள் வைக்க சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் தீயணைப்புத்துறை 4 வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெடிவிபத்தின் அதிர்வு சுமார் 15 கிலோ மீட்டர் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசு ஆலை அருகில் இருந்த காலனி வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட 8 மணி நேரத்திற்குப் பின்னரும் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஏழு அறைகள் முழுமையாக சேதமடைந்ததுள்ளது. இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையின் மேலாளர் சரவணன் என்பவரை சாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. தொழிலாளர்களின் நிலை?

இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், சேதமடைந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனவும், இந்தப் பகுதியில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை:இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பாட்டாசு ஆலை அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விதியை மீறி அளவுக்கு அதிமகமான பட்டாசு மூலப்பொருட்களை தேக்கி வைத்தற்காக ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details