சென்னை:17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுவதைத் தொடர்ந்து, 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் மக்களவைத் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் தேர்தல் நடைபெற்றது.
அந்த வகையில், இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
நட்சத்திர வேட்பாளர்கள் களம் கண்டுள்ள விருதுநகர் தொகுதியில் 4 சுற்றுகள் முடிவுகள் வரை முன்னிலை வகித்து வந்த விஜய பிரபாகரன் தற்போது பின்னடைவைக் காண்கிறார். விஜயபிரபாகரன் வெற்றி பெற்றார் எனில், இவர் தான் தேமுதிக சார்பில் மக்களவையில் காலடி எடுத்து வைக்கும் முதல் எம்.பியாவார்.
கடந்த தேர்தல்களில் தேமுதிக:கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தது. 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் கண்ட தேமுதிக, போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதேபோல், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கை கோர்த்து 14 தொகுதிகளில் களம் கண்ட தேமுதிக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், அதன் வாக்கு சதவீதமும் 6.1 அளவுக்கு குறைந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து விருதுநகர் உள்ளிட்ட 4 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 4 தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது.
விஜய பிரபாகரன் அரசியல் வருகை: சட்டமன்ற எதிர்கட்சியாக வளர்ந்திருந்த தேமுதிக, தொடர் சரிவைச் சந்தித்ததற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் களத்தில் மக்களைச் சந்திக்காதது தான் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். எனவே விஜய பிரபாகரனை, கட்சி தொண்டர்கள் இளைய கேப்டன் என்றே அழைத்தனர்.
திரையுலகில் விஜயபிரபாகரன்: 1992ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விஜய பிரபாகரன், சென்னையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின், சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். சினிமாவில் ஆர்வம் கொண்டதால், 2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தமிழரசன், வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தந்தை விஜயகாந்த் அரசியலில் இருப்பதால், அரசியலில் ஆர்வம் வந்து, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டார். இளைய கேப்டன் என்ற பட்டத்துடன் தேமுதிக இளைஞரணி பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் பல பேரணி மற்றும் போராட்டங்களிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தேமுதிகவை நிர்வகித்து வந்த விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சொந்த மண்ணில் போட்டி: தேமுதிக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், 2024 மக்களவைத் தேர்தலில் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, கடந்தமுறை தோல்வியுற்ற விருதுநகர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் வாரிசு, விஜயபிரபாகரன் களம் கண்டார். தனது தந்தையின் சொந்த ஊரான விருதுநகரில் போட்டியிட்டார்.
4 சுற்றுகள் முடிவுகள் வரை முன்னிலை வகித்து வந்த விஜய பிரபாகரன் தற்போது பின்னடைவை காண்கிறார். இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தேமுதிக, இம்முறை கடுமையான போட்டி போட்டு வருகிறது.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல்: தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1 லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் முன்னிலை! - Lok Sabha Election Result 2024