விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 82 புள்ளி 48 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று (ஜூலை.13) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணியும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.