தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைரல் வீடியோ: கழுத்தளவு தண்ணீர்; பாகுபலி பட பாணியில் குழந்தையை மீட்ட இளைஞர்! - VILUPPURAM FLOOD

விழுப்புரம் மாவட்டம், தேவனூர் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை மீட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை மீட்ட இளைஞர்
கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை மீட்ட இளைஞர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 11:36 AM IST

விழுப்புரம்: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. அதனால், ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த 3 மாத குழந்தையை இளைஞர் ஒருவர், கழுத்தளவு தண்ணீரில் தலையில் வைத்து மீட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், குழந்தையை சாதூர்யமாக மீட்ட இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், தேவனூர் கிராமத்தில் உள்ள சின்ன கவுண்டர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் நேற்று (நவ.3) மழை வெள்ளத்தின் காரணமாக முதல் தளம் வரை வெள்ளநீர் சென்று கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வெள்ளநீர் சற்று வடிந்ததை அடுத்து, அங்கிருந்த மக்களை மீட்கும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பகுத்தறிவு, ரம்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்திருந்துள்ளனர். அதனைக் கண்ட பெயிண்டர் ஆக வேலை செய்யும் ஆறுமுகம் என்ற இளைஞர் துரிதமாகச் செயல்பட்டு, கயிறு கட்டி குழந்தையைப் பெரிய அளவிலான அலுமினியப் பாத்திரத்தில் (அன்னக்கூடை) வைத்து மீட்டுள்ளார்.

தற்போது, பாகுபலி பட பாணியில் கழுத்தளவு தண்ணீரில் தலையில் பாத்திரத்தில் மூன்று மாத குழந்தையை வைத்து மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், திருவெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை, அரசூர் அருகே வராகி அம்மன் கோயில் மற்றும் ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கித் தவித்தவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெள்ளம் வடிந்த பின் வீடு திரும்பினர்.

இதையும் படிங்க:பள்ளியை சூழ்ந்த வெள்ளநீர்.. தற்காலிகமாக மூடப்பட்ட சாலை.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மழை பாதிப்புகள்!

விழுப்புரம் மாவட்டத்தில், மீட்புக் குழுவினர் செல்லமுடியாத இடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, கோவையிலிருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் திரு வெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 2 பேரை மீட்க முயன்றனர். ஆனால், மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால், மீட்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை மீட்ட இளைஞரின் வீடியோ (ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து, அரசூர் அருகே வராகி அம்மன் கோயிலில் வெள்ள பாதிப்பில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 20 பேரை மீட்கவும், தொடர்ந்து அருகே ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கித் தவித்த 3 பேரையும் மீட்கவும் சென்றனர். ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், சிறிது மணி நேரத்துக்குப் பிறகு மீட்க முடியாமல் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. அதன் பின்னர், நேற்று மதியத்திற்கு மேல் வெள்ளம் வடிந்த பின் அனைவரும் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details