விழுப்புரம்:கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி திரெளபதி அம்மன் கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை திறக்கக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கோயிலை திறந்து பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு கால பூஜையை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்றைய தினம் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கதவு அடைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 22ஆம் தேதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி கோயிலை திறந்து ஒரு கால பூஜையை மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
மேலும், இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முன்னதாக, மேல்பாதி ஊரின் காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், திரெளபதி அம்மன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அதே பகுதியில் வசித்து வரும் வேறு ஒரு பிரிவினரைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.