விழுப்புரம்:தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. இதில், ஹாட்ரிக் ஹிட் அடித்து நரேந்திர மோடியே மூன்றாவது முறையும் பிரதமராக வரவேண்டும் என பாஜக கூட்டணியும், 10 ஆண்டுகளாகக் கிடைக்காத வெற்றியை இந்த தேர்தலில் பெற்று வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா கூட்டணியும் பல வியூகங்களை வகுத்துத் தேர்தலில் களம் காணுகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமார் விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் 'பானை' சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் விழுப்புரம் நாடாளுமன்றத்தின் 17வது எம்பியாக இருந்தார். விழுப்புரம் தொகுதியில் திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். இவர் 2019 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், இத்தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட துரை ரவிக்குமார், 49.49% வாக்குகளுடன் மொத்தம் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளரான பாமகவின் வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகளும், அமமுகவுக்கு 58,019 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,609 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 17,891 வாக்குகளும் கிடைத்தன.
இதனிடையே, விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ' 'வளமான விழுப்புரம் வளர்ச்சியில் முதலிடம்' என்ற முழக்கத்தோடு தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தேன். இங்கு தொழில் வளர்ச்சிக்காக முதன்மையான கவனம் செலுத்தி வருகின்றேன். அதில், முக்கியமாகத் தமிழ்நாட்டில் 'மினி டைட்டில் பார்க்' விழுப்புரம் தொகுதிக்குக் கொண்டு வந்துள்ளேன்.
அதேபோல, திண்டிவனம் அருகே சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்துள்ளேன். அடுத்த கட்டமாக, தமிழகத்தில் விழுப்புரம் தொகுதி தொழில்துறையில் முன்னேற்றம் அடையும் என தொழில்துறை அமைச்சர் என்னிடம் கூறியுள்ளார். இதேபோல கல்வி, சுகாதாரத்திற்கும் நான் முன்னுரிமை அளித்துள்ளேன். இதனால், இங்கு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு; மீனவர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறுத்தம்: இந்தியாவிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான (Cervical cancer) தடுப்பூசி திட்டத்தை, நான் விழுப்புரம் தொகுதியில் அறிமுகப்படுத்தினேன். இந்தியாவில் இயற்றப்படும் சட்ட உருவாக்கத்திலும், திட்டங்களுக்கான நடைமுறைப்படுத்தலிலும் தலையீடு செய்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கான பணி, இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பணி. இதை மற்றவர்களைக் காட்டிலும் நான் சிறப்பாகவே செய்துள்ளேன். மருத்துவ படிப்பில் முக்கியமான துறைகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு (Reservation for OBC) அளிக்க வழிவகை செய்தேன். அதேபோல, மீனவர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்ட மசோதாவை தடுத்து நிறுத்தினேன்.
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா:இதேபோன்று தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை நான்தான் முதலில் அறிமுகப்படுத்தினேன். அதன் பிறகே, இந்திய அரசானது தனிநபர் தகவல் மசோதாவைக் கொண்டு வந்தது, பெண்களின் சுகாதாரத்திற்காக முன்னுரிமை கொடுக்கும் வகையில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.