தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூடுபிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்: விழுப்புரம் தொகுதியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

viluppuram lok sabha constituency: விழுப்புரம் தனித் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, செருப்பை மாலையாக அணிந்தும், கேஸ் சிலிண்டரை தலையில் சுமந்து என மக்களிடம் நூதன முறையில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

villupuram election campaign
villupuram election campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 4:03 PM IST

Updated : Apr 5, 2024, 6:38 AM IST

விழுப்புரம் தொகுதியில் போட்டி போட்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. அதற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சில வேட்பாளர்கள் மக்களைக் கவர்வதற்காகச் சாலையோரம் உள்ள கடைகளில் டீ போட்டும், பூரி சுட்டுக் கொடுத்தும் என பல விதமாக வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த தனித் தொகுதிகளான சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக வேட்பாளர்கள் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் தனித் தொகுதியில் 17 வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றனர். அதில் குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வரும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

அதிமுக:வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக, விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம், டி.புதுப்பாளையம் கிராமத்தில், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெட்ரோல் - டீசல் விலை அதிகரித்துக் காணப்படுவதை உணர்த்தும் விதமாகப் புதுப்பாளையம் கிராமம் முழுவதும் மாட்டு வண்டியை ஓட்டி வந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

திமுக கூட்டணி: விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த துரை ரவிக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து, விழுப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக, சிறுவர்களின் உடல் முழுவதும் பானை சின்னத்தை வரைந்து வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி: எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என யாருடனும் கூட்டணி வைக்காமல், மக்களோடு தான் கூட்டணி என்கிற முறையில் தனித்து களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. அதற்காக விழுப்புரம் தனித் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் களஞ்சியம், திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மற்ற வேட்பாளர்களை மிஞ்சும் வகையில், வீதியில் இறங்கி பள்ளிச் சிறுவர்களுடன் நடனமாடி தனக்கான வாக்குகளைச் சேகரித்தார்.

மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், "வாக்காளர்களிடம் தான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க மாட்டேன்" என்கிற உறுதிமொழியையும் அனைவரிடமும் தெரிவித்து வருகிறார்.

இந்தியக் குடியரசு கட்சி: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஒருங்கிணைந்த இந்தியக் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம், தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான சமையல் கேஸ் சிலிண்டரை தலையில் சுமந்தவாறு விழுப்புரம் புது பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இதேபோன்று, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கோ.கலியமூர்த்தி தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் விழுப்புரம் நகர வீதிகளில் வீடு, வீடாகச் சென்று யானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சுயேச்சை கட்சி: உளுந்தூர்பேட்டையை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன். இவர் தொடர்ந்து உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை ஆகிய தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிடுவது வழக்கம். மேலும், தனக்கு அளிக்கப்படும் சின்னத்தை, மக்கள் மனதில் பதிய வைக்கும் விதமாக அந்த சின்னத்தை வைத்து வாக்கு சேகரிப்பார். அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். அரசனின் மனு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் ஏற்கப்பட்டு, அவருக்குச் செருப்பு சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது தொகுதிக்குள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட அவர், உளுந்தூர்பேட்டை நகரம் முழுக்க வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரிடத்திலும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள செருப்பு சின்னத்தை மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டு, கையில் செருப்புச் சின்னம் உள்ள பதாகையுடன் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், "செருப்பு எவ்வாறு நமக்கு உழைக்கின்றதோ... அதேபோன்று நானும் உங்களுக்காகச் செருப்பாக உழைப்பேன். கல்லு, முள்ளு, வெயில், அசுத்தம் உள்ளிட்டவற்றிலிருந்து உங்களைக் காக்கும் செருப்பைப் போன்று நான் உங்களைக் காப்பேன்" எனக் கூறி வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் செருப்பு சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், யார் வெற்றிப் படியை எட்டப்போவது என்ற போட்டி அனைவரிடமும் தீவிரமடைந்துள்ளது. அதனால், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் 17 வேட்பாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விழுப்புரம் தொகுதி முழுவதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் அஸ்தி கோவை வருகை.. விவசாயிகள் மலர் தூவி மரியாதை! - Shubhkaran Singh

Last Updated : Apr 5, 2024, 6:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details