விழுப்புரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க தொகுதியான விழுப்புரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் ரேஸில், வெற்றிக் கனியை எட்டப்போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசியல் ஆளுமைகளிடையேவும் மிகுந்து காணப்படுகிறது.
விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டுள்ள விழுப்புரம் தொகுதியில், நெல் மற்றும் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இப்பகுதி அமைந்துள்ளதால், இங்கு கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆகையால், இப்பகுதியில் கரும்பு ஆலைகளும் அதிக அளவில் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, 2009ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. அந்த வகையில், விழுப்புரம் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அதிமுக 2 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளது.
தற்போதைய சூழலில், விழுப்புரம் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் முரளிசங்கர் மற்றும் நாதக சார்பில் மு.களஞ்சியம் போட்டியிடுகின்றனர். இதில், கடந்த 2019ல் நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட துரை.ரவிக்குமார் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ரவிக்குமாருக்கு வெற்றி கிடைக்குமா?: கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார், இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதி மக்களின் ஆதரவால் எம்.பி-யான ரவிக்குமார், தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு, பலமாக எழுகிறது.
அதுமட்டுமன்றி, கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியிலுள்ள சொந்த கட்சியினரிடமும், கூட்டணி கட்சியினரிடமும் தொடர்பில்லாமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் ரவிக்குமார் நின்றதால் திமுகவினர் ஆர்வமுடன் தேர்தல் பணியில் ஈடுப்பட்டதாகவும், இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுவதை, திமுகவினர் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
தொகுதி மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் ரவிக்குமாருக்கு அதிருப்திகள் சில இருப்பினும், மாநில அளவிலான பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்து, அதற்கான தீர்வுகளை நோக்கி அரசு எந்திரத்தை செயல்பட வைத்ததில், அவருக்கு தனி இடம் உண்டு என்பதே நிதர்சனம். மேலும் முற்போக்கு சிந்தனையுடன் ஊடகத்துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு ஒரு சிறந்த எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார் ரவிக்குமார்.
அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறதா?:அதிமுக வேட்பாளரான பாக்யராஜ் அதிமுகவினருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர். நான்கு முனை போட்டி களத்திற்குள் இருந்த இவர், தற்போது திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ரவிக்குமாரை பின்னுக்கு தள்ளிவிட்டு, முதலிடத்திற்கு வந்திருப்பதாக சில பேச்சு அடிபடுகிறது. அதிமுகவினரின் தேர்தல் பணிகள் மட்டும் இதற்கு காரணமல்ல. இதனைவிட சி.வி.சண்முகம் சத்தமில்லாமல் செய்து வரும் தேர்தல் பணிகளும் முக்கிய காரணமாக அதிமுகவினர் கூறுகின்றனர்.