தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த வில்லிசேரி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த பொதுக்கழிப்பிடத்தை அகற்றிவிட்டு, புதிய கழிப்பிடம் கட்டித்தர உள்ளதாகக் கூறி, 8 ஆண்டு முன்னர் அக்கழிப்பிடம் அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை, புதிய கழிப்பிடத்தைக் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் வில்லிசேரி-சமாதானபுரம் சாலையை பொதுவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சாலை முழுவதும் மனித கழிவுகள் நிரம்பியுள்ளதால், அப்பகுதி சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு டைபாய்டு, மலேரியா, சீதபேதி, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி பலருக்கும் நோய் பாதிப்புக ஏற்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.