தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டியில் எல்கேஜி சிறுமி உயிரிழப்பு.. வெளியானது சிசிடிவி காட்சி! - SCHOOL CHILD DEAD

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி
சிறுமி இறந்தது தொடர்பான காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 9:49 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியின் உள்ளே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமி உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி (ETV Bharat Tamil Nadu)

பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவால் தான் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தை கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழக்க வாய்ப்பே இல்லை. எனவே, எப்படி குழந்தை இறந்தது என்று பள்ளி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவம் நடந்த பல்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, வட்டாட்சியர் யுவராஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து, வகுப்பறைக்குள் இருந்த குழந்தையின் பாடப்புத்தக பை மற்றும் உணவு பை ஆகிவற்றை உறவினர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், பள்ளியில் செயல்பட்டு வரும் சிசிடிவி பதிவுகளை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவியின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவிலேயே சிறுமி தற்செயலாக கழிவு தொட்டியில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது சிறுமியின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளாதா? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டியில் எல்கேஜி சிறுமி உயிரிழப்பு.. ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

இந்த நிலையில் சிறுமியை, பள்ளி நிர்வாகிகள் காரில் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி இறப்பு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் குறித்து உறவினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

கழிவுநீர் தொட்டியிலிருந்து குழந்தை மீட்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சியில், 1:50 என நேரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பான சிசிடிவியில் 2.40 மணி பதிவாகியுள்ளது. குழந்தையை மீட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒருமணி நேரம் தாமதம் ஏன்? பள்ளி நிர்வாகம் மாணவி உயிரிழப்பு நேரத்தை மாற்றி கூறியது ஏன்?

கழிவுநீர் தொட்டியைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வளைத்து குழந்தை மேலே ஏற காரணம் என்ன? பள்ளி நிர்வாகம் கூறிவது போன்று குழந்தை கழிவறை சென்றாலும், கழிவுநீர் தொட்டி அருகில் செல்ல காரணம் என்ன? கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்தது உண்மை என்றால், குழந்தையின் உடல் மற்றும் ஆடை நனையாமல் இருந்தது எப்படி? குழந்தை உயிரிழந்த தகவலை பெற்றோருக்கு தெரிவிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 2 மணி நேரத்திற்கு பின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details