விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவர், கடந்த 20 நாட்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஏப்.5) விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்வதற்காக வந்தபோது மயக்கம் அடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சூழலில், நேற்று (ஏப்.06) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், புகழேந்தியின் உடல் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை அடுத்து, அங்கு திரளான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா ஆகியோரை ஆதரித்து, நேற்று (ஏப்.06) தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பரப்புரைக் கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து நேரடியாக காரில் விழுப்புரத்திற்கு வந்தார்.
அங்கு, கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.