விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தினுடைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூன்றாண்டு சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி இது. ஸ்டாலின் என்னை வேட்பாளராக அறிவித்தார். அனைத்து அமைச்சர்களுக்கும் சற்றும் களைப்படையாமல் தேர்தல் பணியாற்றினர். அமைச்சர்கள் மற்றும் இத்தேர்தலுக்கு பணிபுரிந்த திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கடந்த 11ஆம் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 32 நாட்களாக என்னோடு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி, தொகுதி முழுக்க வலம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.