சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அக்கட்சியின் சார்பில் குருபூஜையாக கடைபிடிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அழைப்பு விடுத்திருந்தார்.
தடையை மீறி பேரணி: மேலும், கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையம் முன்பிருந்து விஜயகாந்த் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகம் வரை அமைதி பேரணி செல்லவும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று அமைதிப் பேரணி தொடங்கும் வரை காவல்துறையினரின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜயகாந்த் மகன்கள், ஆயிரகணக்கான தேமுதிக தொண்டர்கள் குவிந்தனர்.
அமைதிபேரணி நடத்த காவல்துறை அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென சாலைமறியலிமும் அவர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தடையை மீறி தேமுதிக அலுவலகம் நோக்கி பிரேமலதா தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கியது. அப்போது போலீசார்் அதனை தடுக்க முயன்றதால் கட்சித் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும்் இடையே தள்ளுமுள்ளு நேரிட்டது.
எனினும் காவல்துறையினரால் அமைதிப் பேரணியை தடுக்க முடியவில்லை. பேரணியானது விஜயகாந்த் நினைவிடம் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் விஜயகாந்த் குருபூஜையை முன்னிட்டு அன்னதானத்தையும் பிரேமலதா தொடங்கி வைத்தார்.
தமிழ் மீது பற்றுக் கொண்டவர்:இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளின் தலைவர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,” திமுக சார்பாக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறோம். அவர் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகிறார். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அன்பு கொண்டவராக இருந்தார். ஏழைக்கு உதவியவர். அவர் தலைவராக இருந்த போது கலைஞருக்கு விழா எடுத்து தங்க போனோவை பரிசாக வழங்கியவர்.
அவரின் மறைவின் போது அரசு முழுமரியாதை வழங்கியது. அவரின் லட்சியத்தை அவரின் துணைவியார் தொடர்ந்து வழிந்நடத்துவார்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் பேரணியாக வந்தது மகிகழ்ச்சி. இதனை ஊதி பெரித்தாக்க வேண்டாம். அவரது குடும்பத்தில் ஒருவராக இன்று அவருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறோம்,” என்றார்.
என்றென்றும் நிலைத்து நிற்பார்:விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,”அரசியல் கட்சியை துவங்கி எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலில் தனக்கென தனி முத்திரையை படைத்தவர் விஜயகாந்த். அவருடைய வரலாறு மற்றும் அரசியல் வரலாறு என்றென்றும் நிலைத்து நிற்கும். அவருடைய புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக எங்களுடைய மரியாதையை செலுத்தி இருக்கிறோம்,” என்றார்.
மதிப்புமிக்க மனிதர்: விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,” எந்த பின்புலமும் இல்லாமல் திரை உலகிற்கு வந்து நீண்ட நாட்கள் போராடி தன்னை தானே செதுக்கி வளர்த்துக் கொண்டு எல்லா மக்களாலும் நேசிக்கப்படக்கூடிய புரட்சி கலைஞராக உயர்ந்து அன்பாக எல்லோராலும் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர்.
ஒரு மதிப்பு மிக்க மனிதராக உயர்ந்து எளிய பின்புலத்தில் இருந்து வந்ததாலே எளிய மக்கள் உழைக்கும் மக்கள் பசியோடு இருக்கிற பாட்டாளி மக்களளோடு இருந்தவர். தன்னுடைய வருவாயின் ஒரு பகுதியை படிக்க வசதி இல்லாத மாணவப் பிள்ளைகளுக்கு செலவழித்தவர். பிரச்னை என்று வருகிறபோது அவர்கள் கொடுக்கக்கூடிய மனுக்களை பெற்றுக் கொண்டு உதவியவர்.
கஷ்டப்படுகிற நடிகர்களை தன்னோடு நடிக்க வைத்தவர்.புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்.அவரால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு அவரால் விழுந்தவர், தாழ்ந்தவர்கள், அழிந்தவர்கள் என்று ஒருவர் கூட இருக்க முடியாது அப்படிப்பட்ட ஒரு மகத்தான மாமனிதர்.இன்னும் பத்து ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்ததால் தமிழ்நாடு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்,” என்றார்.
சகோதரர் போல பழகியவர்:மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்,” நடிகர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராக தம்பிகள் அனைவருக்கும் அண்ணனாக மிக பாசத்தோடு வாழ்ந்தவர், அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு தமிழக மக்கள் மத்தியில் இருக்கின்ற அந்த பாச உணர்வு எந்த விதத்திலும் குறை இல்லாமல் தொடர்ந்து அவர் மீது அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது நான் அவரோடு அதிகமாக பழகி இருக்கிறேன், எங்கள் கட்சி பிரச்சாரத்திற்கு கொங்கு மண்டலத்திற்கு வருகை புரிந்திருக்கிறார்...
ஒரே வயிற்றில் பிறந்த சொந்த தம்பியை போல நினைத்து பேசக்கூடியவர் பழகக் கூடியவர் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு ஆகியும் தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும் தமிழக மக்கள் மத்தியிலும் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார்