திருவாரூர்:சமீப காலமாக அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு, அதாவது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இதனைக் கொடுக்க மறுக்கும் மது பிரியர்கள், தங்கள் வாங்கும் மது பாட்டிலுக்கு பில் கேட்டு வருவதோடு, இது தொடர்பான வீடியோக்களை எடுத்து அதனை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபான கடையில் பில் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவாரூர், வலங்கைமான் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாடை கட்டி மாரியம்மன் என்கிற மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரசு டாஸ்மாக் கடை எண் - 9660.
இங்கு வந்த இளைஞர்கள் சிலர் 300 ரூபாய் கொடுத்து மதுபானம் வாங்கிவிட்டு அதற்கு பில் கேட்கின்றனர். மேலும் இதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்கின்றனர். இதனைக் கவனித்த டாஸ்மாக் ஊழியர் அவரது செல்போனில் பதிலுக்கு இளைஞர்களை படம் பிடிக்கிறார்.