சென்னை:சென்னை போரூர் அடுத்த சமயபுரம் அருகே இன்று காலை வழக்கம் போல சாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கையில், இந்திய ராணுவத்தின் கடற்படை வீரர்களை ஏற்றிக்கொண்டு இந்திய கடற்படை ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று ராணுவ கடற்படை வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது.
கடற்படை வாகன ஓட்டுநரின் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கும் ராணுவ வாகனத்தின் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராணுவ வாகனத்தின் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் வந்தவரின் சாவியை பிடுங்கிக் கொண்டார். அதுமட்டுமின்றி சாவியை தர முடியாது என்று ராணுவ வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருசக்கர வாகன ஓட்டி, தனது வாகனத்தில் சாவியை தருமாறு ராணுவ வாகனத்தின் ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டே சாலையில் ஓடியுள்ளார். அதன் பின்னர் சிறிது தூரம் சென்றதும் ராணுவ வாகனத்தின் ஓட்டுநர், இரு சக்கர வாகன சாவியை சாலையில் வீசி எறிந்து விட்டு சென்றார்.
இந்த சம்பவத்தை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டியிடம் அதிகாரப் போக்குடன் அத்துமீறிய கடற்படை வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தப்புத் தப்பாக மந்திரம் சொல்லி மது! முதியவரின் அட்ராசிட்டி - Old Man Drinking Video