சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளில் தீவிர பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வரும் ஜூலை 10 நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுகவின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவாவை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர், மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான். 1986ஆம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கருணாநிதியின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கருணாநிதியின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்.
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர், ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர், அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவர், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.