கோயம்புத்தூர்: கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன.
இதனால், வனத்துறையினர் வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வருகின்றனர். எனினும் உணவு பற்றாக்குறை இருப்பதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவது தொடர்கிறது. குறிப்பாக மதுக்கரை, போளுவாம்பட்டி, தடாகம், மருதமலை வனப்பகுதிகளில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் புகுந்து, விவசாய பயிர்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளை உடைத்து உள்ள இருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களைச் சாப்பிட்டு வருகிறது.