வேலூர்:திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 7 தேதி முதல் 10 ஆம் தேதி வரை 80 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் பங்கேற்கும் 'அறிவியல் கண்காட்சி' நடத்த உள்ளதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் நேற்று (பிப்.6) தெரிவித்துள்ளார். 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் சுமார் 80 பள்ளிகள், கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வேலூர் சேர்க்காட்டில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மாபெரும் அறிவியல் கண்காட்சி (நாளை) பிப்.7 முதல் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இது நடத்தப்பட உள்ளது. இந்த அறிவியல் கண்காட்சியில் 80 கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்த அறிவியல் கண்காட்சியையொட்டி, 10 தலைப்புகளில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தனித்தனியே வினாடிவினா போட்டிகள், அறிவியல் சார்ந்த கருத்தரங்குகளும் நடைபெறும். இந்த அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை காட்சிப்படுத்த கட்டணம் ஏதுவும் இல்லை.