திருநெல்வேலி:பெண் யானைகளுக்கு மதம் பிடிக்குமா? அப்படியானால் எந்த நேரத்தில் பெண் யானைகள் ஆக்ரோஷமடையும் என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண் யானை தெய்வானை தாக்கியதில் நேற்று இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதவி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் இருவரும் யானைக்கு உணவளித்த போது திடீரென யானை மதம் பிடித்தது போல் நடந்து கொண்டதாகவும், பின்னர் தும்பிக்கையால் இருவரையும் தாக்கியதில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
யானையை எரிச்சலூட்டும் சம்பவம் நடந்துள்ளது:தமிழ்நாட்டில் இதுபோன்று கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் மதம் பிடித்து யாரையும் தாக்கியது இல்லை. ஆனால் திருச்செந்தூரில் உள்ள யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக ஈடிவி பாரத் சார்பில் கால்நடை மருத்துவர் மனோகரனை தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது, "பொதுவாக ஆண் யானைகளுக்கு தான் மதம் பிடிக்கும் பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. அதே சமயம் பெண் யானைகளிடம் யாரேனும் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால் கோபத்தின் மிகுதியில் பெண் யானைகள் இதுபோன்று மனிதர்களை தாக்க நேரிடும். எனவே, இந்த சம்பவத்திலும் யானையை எரிச்சலூட்டும் வகையில் ஏதாவது சம்பவம் நடந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே யானை இந்த அளவுக்கு அவர்களை தாக்கியிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அசாமில் இருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?
பாலூணர்வு தூண்டும் நேரத்தில் மதம் பிடிக்கும்: அதேபோல், இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மற்றொரு கால்நடை மருத்துவர் ஈடிவி பாரத் தமிழ் தமிழ்நாடிடம் கூறும் போது, "பொதுவாக யானைகளுக்கு மதம் பிடிக்கும் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம். யானைகளுக்கு மத நீர் வடியும் அந்த சமயத்தில், யானைகள் ஆக்ரோஷமாக மனிதர்களை தாக்கும். ஆண் யானைகளுக்கு மட்டும் அல்லாமல், பெண் யானைகளுக்கும் சில நேரங்களில் இதுபோன்று மதம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறும்.
ஆனால் அந்த நேரத்தில் ஆண் யானைகளை போன்று பெண் யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக வெறி பிடித்ததை போன்று நடந்து கொள்ளாது. பொதுவாக பெண் யானைகளுக்கு பாலூணர்வு தூண்டப்படும் நேரத்தில் அதாவது கருமுட்டைகள் உருவாகும் நேரத்தில் பெண் யானைகளுக்கு ஒரு சுரப்பி வடியும் அந்த நேரத்தில் பெண் யானைகள் உடல் சோர்ந்து காணப்படும். மிகவும் அசௌகரியமான நிலைய உணரும். எனவே அந்த நேரத்தில் யானைகளை யாராவது எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொண்டால் கோபத்தில் அது மனிதர்களை தாக்கும்.