வேலூர்: அம்மிக்கல் கொத்தி தருவது போல் வந்து வீட்டை நோட்டமிட்டு ஜன்னலை உடைத்து நகையை திருடிச் சென்ற இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரனையில், வேலூரை அடுத்த பெருமுகை இந்திராநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது 38). இவர் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவர், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அடையாம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
கோகுல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் DSP திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. ஆய்வு செய்த சிசிடிவி காட்சியில் திருடு நடந்த வீட்டிற்கு அருகே ஒரு பெண்ணும், 2 ஆணும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து, அதில் பதிவாகியிருந்தவர்கள் செல்லும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.