ஏ.சி.சண்முகம் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய அக்கட்சியின் தலைவரும் பாஜக கூட்டணி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம், "தமிழ்நாட்டில் மிகப்பெரிய கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி பிரதமர் மோடி, என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்காக வேலூரில் வாக்கு சேகரிக்க வர உள்ளார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பர்.
தொலைத்த தாமரையை மீட்கவே போட்டி:2014 நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் நான் போட்டியிட்டபோது, அத்வானி வந்து பேசுகையில், என்னை வெற்றி பெறச் செய்தால் மோடி தலைமையிலான அமைச்சரவையில் எனக்கு அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள்.
ஆனால், நீங்கள் 5 ஆண்டுகளை வீணடித்து விட்டீர்கள். ஏன் நீங்கள் ஆரணி தொகுதியில் நின்று இருக்கலாமே, வேலூரில் ஏன் நீற்குறீர்கள்? எனக் கேட்கிறார்கள். நான் ஆரணி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளேன். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் ஆரணி தொகுதி இதே தொகுதியில் இருந்தது.
ஆரணி தொகுதியில் நான் நின்றிருந்தால் ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதிகளிலும், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். ராஜ்நாத் சிங், என்னிடம் கொடுத்த தாமரையை நான் வேலூரில் வந்து தொலைத்து விட்டேன். அதனை மீட்டெடுக்கவே, வேலூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுகிறேன். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிட்டேன். சாவடிக்கு இரண்டு ஓட்டுப் போட்டு இருந்தால் கூட நான் வெற்றி பெற்றிருப்பேன்.
பாஜக கூட்டணிக்கு யார் வருவார்கள் என்பதை எல்லாம் எதிர்பார்த்து நான் நிற்கவில்லை. எல்லா வேட்பாளர்களும் ஒரு மாதமாக வரும் நிலையில், நான் 11 மாதமாக இங்கு உழைத்து வருகிறேன்.
அப்பா, மகன் போட்டாவுக்காகவே பேருந்து நிறுத்தம்: கடந்த 2019 தேர்தலில் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் தேர்தல் வேண்டாம் என முடிவு எடுத்தேன். பிறகு எதிர்க்கட்சிகள், மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பூஜ்ஜியம் தான் எனச் சொன்னார்கள். அதை முறியடிக்கவே தேர்தலில் நிற்கிறேன். திமுக அரசு, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருகிறேன் என்றார்களே.. கொடுத்தார்களா? ஆனால், மோடி அவர்கள் 320 ரூபாயை வழங்குகிறார்.
பேருந்து நிறுத்தத்தைக் கட்டியது அப்பா, மகன் போட்டோவை போட்டுக் கொள்வதற்காக தானே தவிர, வேறு என்ன செய்தார்கள்? என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் கூட பள்ளி கல்லூரியை வைத்துள்ளார். ஏதேனும், இலவச சீட்டுக் கொடுக்கிறேன் என சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். திமுக காரர்களுக்கே அவர்கள் கொடுப்பதில்லை. ஆனால், நான் பல மாணவர்களுக்கு இலவச சீட்டுக் கொடுத்துள்ளேன்.
அதுமட்டுமின்றி, மிகக் கேவலமான செய்தியை எதிர்க்கட்சி வேட்பாளர் கதிர் ஆனந்த் சொல்லியுள்ளார். தமிழக அரசு குறைந்த ஆட்களுக்குக்கு மட்டுமே வழங்கிய மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அதாவது, "ஏம்மா முகம் எல்லாம் பல பலன்னு இருக்குது, பேரன் லவ்லி போட்டு வந்திருக்கீங்களா?.. நாங்க கொடுத்த ஆயிரமா? எனக் கேட்டு இருக்கிறார். இது எவ்வளவு பெரிய அசிங்கம்.
இலவச சீட்டு தருமா திமுக?: நான் ஒரு கேரண்டி கொடுக்கிறேன். ஆறு தொகுதிக்கும் எம்பி அலுவலகம், இலவச திருமண மண்டபம் கட்டுவேன், ஐந்து ஆண்டும் இங்கேயே இருந்து சேவை செய்வேன். ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் தாமரை மலரும். அனைத்து அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படும், அனைத்து குடும்ப திருமணம் மற்றும் இறப்புக்கும் நான் உதவுவேன்" என அவர் பேசினார்.
அதிமுக vs பாஜக:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், "அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசிய விதம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி என் மீது வழக்கு தொடரட்டும் அதனை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.
இதைவிட என்ன ஆதாரம் வேண்டும். தாமரை சின்னத்தில் நான் நிற்கும் போது, வேலூரில் அதிமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி. அதில், 1,400 வாக்குகள் தான் வித்தியாசம். நான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் 2019-ல் நின்றபோது, எனக்கு எவ்வளவு ஓட்டு வந்திருக்க வேண்டும். குறைந்தது 4 ஆயிரத்து 500 ஓட்டுகள் குறைவாகியுள்ளன.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் வாணியம்பாடியில் எனக்கும் இரட்டை இலைக்கும் 1,800 வாக்கு தான் வித்தியாசம். அதன் பிறகு 2019 தேர்தலில் இரட்டை இலையில் நின்றபோது, சுமார் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசம் வந்தது. அதன்பிறகு அதிமுக எம்எல்ஏ வந்து 6 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு என்ன காரணம்?. ஆகவே, மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வந்து பாருங்கள் மோதி பார்க்கலாம்” - பட்டாசு தொழிலை காக்க திமுக குரல் கொடுக்கவில்லை என சிவகாசியில் ஈபிஎஸ் பேச்சு! - EPS In Sivakasi