வேலூர்:வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (44). இவர் வேலூர் அடுத்த சேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சசிகலாவும் (34) பத்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளன. இருவரும் தனியார் காலனி தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் தியாகராஜன் மனைவி சசிகலா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாமனார், மாமியார், குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சசிகலா வீட்டில் தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமார் 4 மணி அளவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிற்குள்ளேயே அங்கேயும், இங்கேயும் வேகமாக நடந்து கொண்டு இருந்துள்ளார்.
இதனைக் கண்ட தியாகராஜனின் தாய் ஜெயஸ்ரீ எதற்காக இந்த நேரத்தில் இவ்வளவு வேகமாக நடந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த உறவினரிடம் நான் எனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன் என்று சொல்லி உள்ளார் தியாகராஜன். இதில் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டு உறவினர்கள் தியாகராஜனின் வீட்டிற்கு வந்து தியாகராஜனின் தாய் மற்றும் தந்தையை எழுப்பி தியாகராஜன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த மாமனார் மற்றும் மாமியார் சசிகலா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது சசிகலா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக தியாகராஜனின் உறவினர்கள் கே.வி குப்பம் காவல்துறையினருக்கும், சசிகலாவின் உறவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.