வேலூர்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டியதாக குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா நேற்று (மார்ச் 1) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவது முதல் முறை ஆகும்.
தமிழகத்தில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வரும் 22ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த தேர்வைத் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றுபவர் நேசபிரபா. இவர், நேற்று நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் வினாத்தாள்களை பெற்று வராமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை பணியிடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அருள்ஒளி உத்தரவிட்டுள்ளார்.