தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உழவர் சந்தை: விவசாயிகளுக்கு நற்செய்தி சொன்ன வேலூர் கலெக்டர்! - VELLORE NEWS

வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மினி உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

விவசாயிக்கு இனிப்பு வழக்கும் வேலூர் கலெக்டர்
விவசாயிக்கு இனிப்பு வழக்கும் வேலூர் கலெக்டர் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 8:33 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மினி உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களை உழவர் சந்தையில் விற்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை, காட்பாடி உழவர் சந்தை ஆகியவை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று வெள்ளி விழாவானது வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் நடைபெற்றது.

இந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெள்ளி விழா கேக்கினை வெட்டி உழவர் பெருமக்களுக்கு வழங்கினர்.

பின்பு உழவர் சந்தையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் உழவர் சந்தையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் வேலூர், கணியம்பாடி மற்றும் அணைக்கட்டு வட்டாரங்களில் இருந்து 580 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு பேருந்து வசதி, பேருந்தில் இலவச சுமை கட்டணம், மின்னணு எடை தராசு வசதி, குடிநீர் வசதி, குளிர் பதன கிடங்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் உழவர் சந்தையில் 35 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் சராசரியாக ரூ.13 இலட்சம் மதிப்பில் விற்கப்படுகிறது.வேலூர் உழவர் சந்தை 2021-2022 நிதி ஆண்டில் அடிப்படை கட்டமைப்புகளுக்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய பொலிவுடன் இயங்கி வருகிறது.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலமாக மானியத் திட்டங்களில் வழங்கப்படும் இடுபொருட்கள் உழவர் சந்தை விவசாயிகளுக்கு கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவை நுகர்வோருக்கு கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதிய உழவர்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர கிராம வாரியாக வாரந்தோறும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது." என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details