தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுக்கி விழுந்தால் மீட்க கூட ஆளில்லை.. வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் தவிக்கும் பக்தர்கள்! - பக்தர்கள் கோரிக்கை

Velliangiri Hills: வெள்ளியங்கிரி மலையில், மலை ஏற்றத்துக்குச் செல்லும் பக்தர்கள் குடிநீர், கழிப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெரும் அவதிக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Velliangiri Hills visiting Devotees suffer without basic facilities
வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 11:46 AM IST

வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதி

கோயம்புத்தூர்: கோவை மாநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் தமிழக-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ளது வெள்ளியங்கிரி மலை. 5 ஆயிரத்து 833 அடி உயரமும், ஐந்தரை கி.மீ. தூரமும் உள்ளது. வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில், தோரணப்பாறை குகையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மையாருடன் அருள்பாலிக்கிறார்.

முதல்மலையான வெள்ளை விநாயகர் கோயில், இரண்டாவது மலை பாம்பாட்டி சுனை, மூன்றாவது மலை கைதட்டி சுனை, நான்காவது மலை சீதைவனம், ஐந்தாவது மலை அர்ச்சுனன் தபசு, ஆறாவது மலையில் பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை மலைகளும் மற்றும் ஏழாவது மலையான கிரி மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிக்கும் சுவாமி முடி மலையாகவும் உள்ளது.

நான்கு யுகங்கள் கண்ட மலை, காமதேனு வழிபட்ட மலை, தென் கைலாயம், சிவபெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய மலை என்று ஏராளமான பெருமைகளைக் கொண்ட இந்த மலைக் கோயிலுக்கு, கடினமான ஏழு மலைகளைக் கடந்து நடந்தே செல்ல வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இங்கு சென்று வர பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த கால கட்டத்தில், கரடு முரடான மலைப்பாதையில் தினமும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த ஆண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளியங்கிரி மலை ஏற்றம் பிப்ரவரியில் தொடங்கி உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கி உள்ளனர்.

இந்த மலையில் காணக்கூடிய மிக ரம்மியமான இயற்கை காட்சிகள், வித்தியாசமான சோலைக்காடுகள், மிக சுவையான சுனைகளின் குடிநீர் போன்றவை, அட்வெஞ்சர் (Adventure) விரும்பும் இளைஞர்கள் ஏராளமானோரை இந்த மலை ஏற்றத்துக்கு வரவைக்கிறது. இப்படி பல லட்சம் பேர் வந்து செல்லும் வெள்ளியங்கிரி மலையில், ஏறி வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள், மருத்துவ உதவி, பாதுகாப்பு போன்றவை இல்லாததால், மலை ஏறும் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

இன்னொரு புறம் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து சுற்றுச் சூழல் கெடுகிறது. இதுகுறித்து வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பூசாரி ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், "வெள்ளியங்கிரி மலை தரிசன அனுமதி தொடங்கி உள்ளது. பக்தர்கள் 24 மணி நேரமும் மலை ஏறலாம். வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், காலி தண்ணீர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதை தடுக்க வேண்டும்.

மேலும் இங்கு போடப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன. எனவே, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. மேலும், மலையில் ஆங்காங்கு கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும், ஆளுக்கு ஒன்றாக கீழே எடுத்துச் சென்று விட்டால் மலையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் காக்கப்படும். இதற்கு அனைத்து பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து பக்தர் மணிகண்டன் என்பவர் கூறுகையில், "மலையில் வழித்தடம் என்பது மிகவும் கரடு முரடாக உள்ளது. முதல் மூன்று மலைகளில் இருக்கும் கல் படிக்கட்டுகள் பெரும்பாலும் இடிந்து, கற்கள் மலை எங்கும் உருண்டு கிடக்கிறது. மேலும், இந்த மலையில் போதுமான விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் மலை ஏறும் பக்தர்கள் மலை ஏற்ற பயணத்தின் போது விழுந்து அடிபடுவதும், ஒரு சிலர் உயிரிழப்பதும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வருகிறது.

வெள்ளியங்கிரி மலைப்பாதையை சீரமைத்து தர வேண்டும். பக்தர்களுக்கு ஒவ்வொரு மலையிலும் குடிநீர், உணவு வசதி செய்து தர வேண்டும். மேலும், இந்த மலையில் ஏறும் பக்தர்கள் கீழே விழுந்து அடிபடும் காலங்களிலும், உடல் நிலை பாதிக்கப்படும் காலங்களிலும், அவர்களை கீழே கொண்டு வர டோலி என்கிற பல்லக்கு சென்று வர வசதி செய்துத் தர வேண்டும். அவ்வாறு செய்தால் மலை ஏற இயலாதவர்கள், மலை ஏற்றத்தில் பாதிக்கப்படுபவர்கள் என அனைத்து தரப்பினரும் எளிமையாக மலை ஏறி இறைவனை தரிசனம் செய்ய முடியும்" என்றார்.

தொடர்ந்து, திருக்கோயில் திருத்தொண்டர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "வெள்ளியங்கிரி மலையில் எந்த வசதியும் இல்லை. ஒவ்வொரு மலை முடிவிலும் வனத்துறை, இந்து அறநிலையத்துறை இணைந்து முதலுதவி மருத்துவ மையங்கள், பல்லக்கு வசதி போன்றவற்றை உடனே செய்ய வேண்டும். மலை மேல் வனத்துறை மற்றும் காவல்துறை கண்காணிப்பு அவசியம்.

பக்தர்களுக்கு ஏதாவது பிரச்னை ஆனால், கீழே இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கவே ஒரு நாள் ஆகி விடுகிறது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட பக்தர்கள் நிலை, மேலும் மோசமாகிப் போகிறது. எனவே, மருத்துவ உதவி மையங்கள், தொடர்பு மையங்களை அமைத்து பக்தர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.

வெள்ளியங்கிரி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி ரஜினி கூறுகையில், "மலை ஏற்றம் தொடங்கிய நிலையிலும், மலை மேல் ஆதிவாசிகளுக்கு அளிக்கக் கூடிய சிறு தின்பண்ட கடைகளை ஒதுக்காததால் எந்த ஒரு உணவும், தின்பண்டங்களும் இல்லாமல், பக்தர்கள் பசியில் அவதிப்பட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது. உடனடியாக ஆதிவாசிகள் சிறு கடைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்.

அவ்வாறு முன் கூட்டியே அனுமதி அளித்தால் எங்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். இத்துடன் இங்கு சோலார் விளக்கு வசதி செய்து தந்தால், மலை ஏறி சென்று வரக்கூடிய பக்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்" என்றார்.
இதையெல்லாம் தவிர, வெளிஉலக தொடர்பு இல்லாமல் மலை ஏறும் பக்தர்கள் சிலருக்கு, இரண்டு நாள் மூன்று நாள் கூட ஆகி விடுகிறது.

ஆகையால், அவர்கள் மலை மேல் தங்குமிடம், கழிப்பிடம், குடிநீர் போன்ற வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, மலைப் பகுதிகளில் மலை ஏறும் பக்தர்கள் பயன்பெற தற்காலிக ஷெல்டர்கள் அமைக்க, கோயில் நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதியில் உதவி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், வெள்ளியங்கிரி மலை பயணம் எல்லோருக்கும் சாத்தியமாகும்” என்றார்.

இதையும் படிங்க:'தமிழ் புதல்வன் திட்டம்' இனி மாணவர்களுக்கு மாதம் 1000 - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ABOUT THE AUTHOR

...view details