காஞ்சிபுரம்: திமுக துவங்கி 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த பவள விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பவள விழா மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "திக முதல் குழல், திமுக 2ம் குழல், 3வது குழலாக விசிக இருக்கும். தேர்தல் அரசியலை முன்னிறுத்தி செயல்படும் சராசரி கட்சி அல்ல திமுக. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஆட்சி பெரியார் வழியில் செல்லும் எனவும், பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன் எனவும் அண்ணா கூறினார்.
குடும்ப வாரிசு இல்லை.. கொள்கை வாரிசு:கலைஞர் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற பின் திமுக ஆட்சி அண்ணா வழியில் பயணிக்கும் என கூறினார். சுய மரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் பெற்றார். இந்தி எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர். தமிழ் இன மொழி உணர்வை உறுதிப்படுத்தினார். மதராஸ் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார் அண்ணா. அவரது வழியில், மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் திராவிட மாடல் என அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் கடந்து வந்த பாதை!
திமுக குடும்ப வாரிசு இல்லை, கொள்கை வாரிசு. பெரியாரின், அண்ணாவின் பேரன் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் அறிவித்திடாத திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர் கலைஞர். எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் கலைஞரை சுற்றியே தமிழக அரசியல் இருந்தது. அண்ணா இருத்தால் தட்டி கொடுத்தும், கலைஞர் இருந்தால் உச்சி முகர்ந்தும் இருப்பார் ஸ்டாலின் செயல்பாடுகளை பார்த்து.