சென்னை: சென்னை பிரசாத் லேப்பில் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் டிரையிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் அனிஷ் அட்மின் பிரபு, இயக்குநர் நடிகர் அலெக்ஸ், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உட்பட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "இளம் வயதில் மிகப் பெரும் முயற்சியை மேற்கொண்டு திரை உலகில் சாதிக்கும் எண்ணத்தோடு திரைப்படத்தை வெளியிட இருக்கிறார் இயக்குநர் அலெக்ஸ். எந்த முன் அனுபவமும் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார்.
இட ஒதுக்கீடு குறித்த படம் என்னை நடிக்க முடியுமா என்று கேட்டார்கள், அப்படி என்றால் படம் வெளி வராது என்றேன். சத்யராஜ் போன்ற ஒரு பெரிய ஆளுமையை இயக்கி உள்ளார் இயக்குநர் அலெக்ஸ். அவர் கதையின் கரு தான் அவரை நடிக்க வைத்துள்ளது. அலெக்ஸ் சிந்தனையும், 200 மேல் திரைப்படம் நடித்த சத்யராஜ் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இணைகிறது.
கல்வி ஒவ்வொருவரின் பிறப்புரிமை, காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்டவர்கள் கல்வியை பெறுகிறார்கள். கல்வி இல்லாத வேலைவாய்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. கல்வியோடு சேர்ந்த வேலை வாய்ப்பால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது. சமமான வாய்ப்பு வந்தால் தான் சமத்துவம்.
நிகழ்காலத்தில் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வழங்குவது சம வாய்ப்பு இல்லை. தலைமுறை தலைமுறையாக படிக்க வாய்ப்பை பெற்றவர்கள், படிக்க வாய்ப்பு பெறாதவர்கள் மோத முடியாது. போட்டிப் போட முடியாதவர்களுக்கு இடம் ஒதுக்கி வைப்பது தான் இட ஒதுக்கீடு" என பேசினார்.