தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாடு ஒரே தேர்தல்; சீமான், திருமாவளவன் சொல்வது என்ன? - one nation one election - ONE NATION ONE ELECTION

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆகியோர் எதிர்வினையாற்றியுள்ளனர்.

திருமாவளவன், சீமான் பேட்டி
திருமாவளவன், சீமான் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 12:05 PM IST

சிவகங்கை: திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது சீமான் கூறியதாவது; ''அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றவர், ஓட்டுக்களை குறி வைத்து இட ஒதுக்கீடு வழங்கினால், நாட்டைக் காப்பாற்றுவது யார் எனக் கேள்வி எழுப்பினர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், அது நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்னையும், ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னையையும் கிளப்புகின்றனர்'' என்றார்.

மேலும், ''நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா என்றார். மேலும் மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள் இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது'' என தெரிவித்தார்.

தொடர்ந்து, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் உயர் ரக விடுதிகளில் மது விற்பனை செய்யலாம். ஆனால், தெருவுக்குத் தெரு உள்ள அரசு மதுபானக் கடையினை மூடுவோம்'' என்றார்.

மேலும், ''தமிழகத்தில் மது வாடை இல்லாமல் மாநாடு நடத்துவது நாம் தமிழர் கட்சி மட்டுமே என்று தெரிவித்த சீமான், விஷமென்று தெரிந்தும் மதுவை அருந்தக்கூடாது. திமுகவிற்கும், அதிமுகவிற்கும் கொள்கை வேறுபாடு கிடையாது. வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது, எங்களுக்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம்.

இதையும் படிங்க:“உதயநிதியைத் தவிர வேறு யாருக்கும் துணை முதல்வராகவும் தகுதி இல்லையா?” - வைகைச்செல்வன் கேள்வி!

தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மீகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியில் தலைநகராக வைக்க வேண்டும். இதனைச் செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும் என்றும், எம்ஜிஆர் முன்மொழிந்ததை கருணாநிதி முடக்கி வைத்தார்'' எனவும் சீமான் தெரிவித்தார்.

திருமாவளவன்:ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய அளவில் சலசலப்பை உருவாக்குவதற்கு பாஜக முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தர வேண்டும், ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாடு என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிப்பதற்கான முயற்சி என அச்சப்படுகிறோம்.

இது தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கைவிட வேண்டும், அதனை நடைமுறைபடுத்த அனுமதிக்கக்கூடாது என விசிக சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளோம். ஆகவே, ஒருமித்த கருத்துடைய அரசியல் சக்திகளோடு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வோம் என்றார்.

மேலும், திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் இது போன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமாக உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதனையும் அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை. விலங்கு கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்பு இருக்கக்கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதலை செய்து இதுபோன்று இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details