தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி விஷவாயு தாக்குதல்; விழுப்புரம் சாலையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்! - PUDUCHERRY POISONOUS GAS ATTACK - PUDUCHERRY POISONOUS GAS ATTACK

PUDUCHERRY POISONOUS GAS ATTACK: புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உட்பட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி விஷவாயு தாக்குதலை கண்டித்து போராட்டம்
புதுச்சேரி விஷவாயு தாக்குதலை கண்டித்து போராட்டம் (Credit -ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 4:00 PM IST

புதுச்சேரி:புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உட்பட இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இன்று உடல்கூராய்வு நடந்தது.

இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணிக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நிவாரணத் தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சிக் கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், மூன்று பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. விழுப்புரத்திலிருந்து வந்த பேருந்துகள் மூலக்குளம் வழியாக திரும்பிச் சென்றன. மறுபுறத்தில், இந்திராகாந்தி சிலை வரை பேருந்துகள் செல்ல முடியாமல் நின்றது.

சுமார் அரைமணி நேரம் நீடித்த மறியல் போராட்டம், போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், இது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் கூறுகையில், “இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டில் பொதுப்பணித் துறைக்கு கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், அடிப்படையான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை, சாலை உள்ளிட்ட வேலைகளை செய்வது யார் பொறுப்பு. அரசாங்கத்தின் அலட்சியத்தால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட புதுநகர் பள்ளிகளுக்கு விடுமுறை:புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. புதுநகர் 6வது தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில், கல்வித்துறையிலிருந்து வந்த தகவலை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதேபோல, அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. விஷவாயுவால் பாதிக்கப்பட்ட புதுநகர் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அங்குள்ள கோயில் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்துள்ளனர்.

மேலும், யாருக்கேனும் தலைவலி, வாந்தி, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவ முகாமிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதனை தொடர்ந்து, அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் பள்ளி தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்! - TIRUCHENDUR SCHOOL HM ISSUE

ABOUT THE AUTHOR

...view details