மதுரை:இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணியில் தற்போது படக்குழு இறங்கி உள்ளது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் என்பவர், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,"கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்புத் தளத்தில் வர்ம முத்திரைகள் சிலவற்றை நான் பயிற்றுவித்தேன். இவை என் புத்தகத்தில் உள்ள முத்திரைகள் ஆகும். படத்தின் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோருக்கு வர்மக்கலை தொடர்பான அறிவியல் நுட்பங்களை விளக்கிக் கூறினேன். மேலும், வர்மக்கலை தொடர்புடைய சண்டை முறைகளை படத்தில் அமைத்தும் கொடுத்தேன். அதனால், இந்தியன் படத்தில் பணியாற்றியவர்களின் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெற்றது.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களில் கமல்ஹாசனுக்கு நான் பயிற்றுவித்த வர்ம முத்திரைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், படத்தில் டைட்டில் கார்டில் எனது பெயர் இடம் பெறவில்லை.