கோயம்புத்தூர்: விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது, அப்பகுதி மக்கள் சேற்றை வீசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் இது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 51 செ.மீ மழைப் பதிவானது. அதனால் விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் வெள்ளநீர் புகுந்ததால், தங்களை மீட்க யாரும் வரவில்லை என்று கூறி இருவேல்பட்டு பகுதி மக்கள் அருகே உள்ள விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களை சமாதானப்படுத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சிலர் சேற்றை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இதுகுறித்து பாஜக மகளிர் அணியின் அகில இந்திய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி பேச்சு வார்த்தை மேற்கொள்ளச் சென்றுள்ளார்.