கோயம்புத்தூர்:காந்திபுரம் அனுப்பர்பாளையம் பகுதியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், நிகழ்ச்சிக்குப் பின்னர் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் சிறிது நேரம் அவரது கோரிக்கைகளை நேரடியாக கேட்டுவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "கோவை மாவட்டத்திற்காக நிறைய அறிவிப்புகளை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். சின்னியம்பாளைம் முதல் நீலாம்பூர் வரை பாலத்தை நீடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பையும், முதலமைச்சர் இன்று கொடுத்திருக்கிறார்.
வானதி சீனிவாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், தங்க நகை பூங்கா என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் முதலமைச்சரிடம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்து இருக்கின்றேன். அதுமட்டுமின்றி, கோவையில் பாதாளச் சாக்கடை, குப்பை இல்லாத கோவை, ஸ்மார்ட் சிட்டி, குளங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் மனுவில் தெரிவித்துள்ளேன்.
இதையும் படிங்க: ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.. மு.க.ஸ்டாலின் பேச்சு!
குறிப்பாக, மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கோரிக்கை முதல் கோரிக்கையாக அந்த மனுவில் இருக்கின்றது.
மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பல்வேறு ஆவணம் மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் கொடுக்காமல் இருக்கின்றது. அதை அவரது கவனத்திற்குக் கொண்டு சென்று இருக்கின்றேன். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் ஒப்படைத்து விட்டதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலர் இன்னும் அங்கு இருப்பது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால், உடனடியாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கின்றேன். அதனால்தான் 95 சதவீத பணிகள் மட்டும் விமான நிலைய விவகாரத்தில் முடிந்து இருக்கின்றது என முதலமைச்சர் சொல்லி இருக்கின்றார். கோவையில் சாலைப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கின்றனர். இந்த 200 கோடியாவது தரமான முறையில் சாலைகள் அமைக்க செலவிடப் பட வேண்டும். கோவை தெற்கு தொகுதியில் பல இடங்களில் பட்டா கிடைக்காமல் இருக்கின்றனர். கோவை வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை என்றார்.
அதைத் தொடர்ந்து, தெற்கால்தான் தற்பொழுது வடக்கு வாழ்கிறது என முதலமைச்சர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, ஒரு குடும்பத்தில் வளர்ச்சி என்பதுதான் முக்கியம். முதலமைச்சர் பிரிவினை வாதம் பேசாமல், மக்களை திசை திருப்பாமல் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். கோவையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் முகாமிட்டுப் பணிகளை மேற்கொண்டு இருப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வரவேற்கின்றேன்.
இதுபோல, அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசுத் துறையில் லஞ்சம் அதிகமாக இருக்கின்றது எனத் தெரிவித்த அவர், கோவையை கவர முதலமைச்சர் முயற்சி செய்கின்றார், கோவையை கவர்ந்து விட்டாரா? என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் தெரியும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்