கோயம்புத்தூர்:கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை வானதி சீனிவாசன் பேசுகையில், “பெண்கள் சங்கம் என்பது ஆன்மீகம், கலாச்சாரம், தேசியம், சகோதரத்துவம், போன்றவற்றுக்காக நடத்தப்படுகின்ற மாநாடு.
இதில், கட்சியின் பெண்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள், பொதுவான பெண்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
கேலோ இந்தியா என்ற நிகழ்வு ஒரு தேசிய அளவிலான நிகழ்வு மத்தியில் விளையாட்டுத் துறை அமைச்சகம் பெருமளவு நிதி உதவி செய்துள்ளனர். பிரதமர் தான் இதைத் துவக்கி வைத்திருக்கிறார். இந்த விளையாட்டுப் போட்டிகள், சென்னையில் மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.
கோவையில் இந்த போட்டிகள் நடந்து கொண்டிருப்பதற்காக பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் எதிலுமே பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை. இதுவே சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் விளம்பர பேனர்களில் இந்த மாநில முதல்வர் புகைப்படத்தை மத்திய அரசு வைத்துள்ளது.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக கூட செஸ் ஒலிம்பியாட் நடக்கும் பொழுதும், இது போன்ற பிரச்சனை செய்தார்கள். மேலும், கோவையில் வைத்திருக்கக் கூடிய அனைத்து பேனர்களிலும் உடனடியாக பிரதமர் படத்தை வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் எங்கள் கட்சியினர் ஒவ்வொரு விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டுவார்கள்.