கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, அதிக வெப்பம் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒரு பக்கம் வறட்சி, இன்னொரு பக்கம் மழை, வெள்ளம் என பெரும் பாதிப்புகளை நம் நாடு சந்தித்து வருகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமானால் காடுகளைப் பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாக்க வேண்டுமானால் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் யானைகள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காடுகளின் நிலப்பரப்பும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கண்டறிந்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு பின்பற்றாமல் தன்னிச்சையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
யானை வழித்தடமாக ஒரு பகுதி அறிவிக்கப்பட்டு விட்டால், அது பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படும். அங்கு வேறு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளை சந்திப்பார்கள்.