கோயம்புத்தூர்:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது வாயாலேயே சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மறந்துவிட்டார். இந்த மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக்கொண்டு வேலை அளித்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஆயிரக்கணக்கான நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய விஷயம் இது. அரசு அதிகாரத்தில் முக்கியமான நபராக செந்தில் பாலாஜி இருந்ததால், சாட்சிகள் பயப்படுவார்கள் என்பதால் தான் அவருக்கு ஜாமீன் கொடுக்காமல் இவ்வளவு நாட்களாக உள்ளே வைத்து இருந்தார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
திமுக அரசு குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ஒருபோதும் நியாயமான விசாரணைக்கு அனுமதித்ததில்லை. திமுக அரசு இந்த வழக்கை அதிகாரத்தைஅப் பயன்படுத்தி நீர்த்து போக வைக்காமல், வழக்கு தொடுத்தவர்ளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பதை தற்போதைய முதல்வரே பேசி இருக்கின்றார். தற்போது செந்தில் பாலாஜி கட்சி மாறி இருப்பதால் அவர் மறந்திருக்கலாம். மாநிலத்தின் முதலமைச்சர். அவருக்கு இவ்வளவு குறைவான வருஷத்தில் மறதி வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செந்தில் பாலாஜியின் ஊரிலேயே மு.க.ஸ்டாலின் தனது வாயாலேயே பேசிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். முதல்வருக்கு இவ்வளவு சீக்கிரம் மறதி வருவது தமிழகத்துக்கு நல்லதல்ல.