சென்னை: இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் ஏராளாமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கவும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்படம் பெசன்ட் நகர் கடற்கரை மணலில் மலர்கள் சூழ அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கை அரசு மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் பாலஸ்தீனத்தில் நடைபெறுகின்ற இனப்படுகொலை போல உலகெங்கும் நடக்கும்.
இலங்கை அரசு இனப்படுகொலை குற்றம் புரிந்ததற்கான பல்வேறு ஆவணங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. நான்கு மாதங்களுக்கு முன்பு கூட இலங்கையில் மனித புதை குழிகள் மூலம் கொத்து கொத்தாக தமிழர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.