சென்னை:தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்த நிலையில், அதற்காக உண்மைக்கு மாறான பல செய்திகளையும் இட்டுக்கட்டி எடுத்துரைத்து தமது தவறான செயலுக்கு மோடி அரசு நியாயம் கற்பிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது’ என்று தடை நீட்டிப்பு ஆணையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது'.
‘விடுதலைப்புலிகளd இயக்கம் தமிழ்நாட்டில் ரகசியமாக செயல்படுகிறது. அனைத்து தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் இயக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது’ என்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டையும் புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது மத்திய அரசு.
ஈழத்தமிழ் மக்கள் மீது, சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இனப்படுகொலை செய்த அநீதியை எதிர்த்து அறவழியிலும், அமைதி வழியிலும் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டு வந்தது, வருகிறது. இந்திய அரசு புலிகள் இயக்கத்தை வன்முறை அமைப்பாக சித்தரித்து தடை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் நான் வழக்காடியபோது, இதுகுறித்து பல்வேறு சான்றுகளுடன் விளக்கியுள்ளேன்.
இலங்கைத் தீவில் தமிழீழ மக்கள் அந்நாட்டு அரசினாலேயே படுகொலைக்கு ஆளானார்கள். அவர்களின் சொத்துக்கள், உடமைகள், நிலங்கள் ஆகியன இராணுவத்தின் துணையோடு கபளீகரம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் இதனை எதிர்த்து குரல் எழுப்பியபோது, அவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகள் அரசின் “வெள்ளை வேனில்” கடத்தி செல்லப்பட்டு இன்று வரை எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் அகதிகளாய் தமிழீழ மக்கள் அங்கே இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சிங்கள இனவெறி அரசு தமிழீழ பகுதியில் இந்துக் கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள், மருத்துவமனைகள், கல்விச் சாலைகள் என சகல இடங்களிலும் பேரழிவு விளைவிக்கும் நச்சுக்குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தும், தமிழீழ பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியும், தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரச பயங்கரவாதத்திற்கு, நீதி கிடைக்கும் வகையில் அந்நாட்டு ஆட்சியாளர்களைக் கூண்டிலேற்றி தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா மன்றத்தில் நான் வலியுறுத்தினேன்.