அரியலூர்:சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இந்த நாடாளுமன்றத் தேர்தல் தான், இந்தியா மற்றும் தமிழ்நாடு எந்த திசையில் செல்லும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையேயான போர் தான் இத்தேர்தல். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வட நாட்டுப் பெயர்களை சூட்டும் நிலையில், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டியவர் தான், திருமாவளவன்.
பிரதமர் மோடி தனது பதவியின் மதிப்பறியாது, திராவிட இயக்கத்தை அழிப்பேன் என பேசி வருகிறார். இது திராவிட இயக்க பூமி. பல்வேறு தலைவர்களாலும், லட்சக்கணக்கான தொண்டர்களாலும் பாடுபட்டு வளர்த்த இயக்கம் என்பதை அவர் அறிய வேண்டும். மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது.
இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடாளுமன்ற முறையை மாற்றிவிட்டு, ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டு வந்து, தான் ஜனாதிபதி ஆகலாம் என மோடி மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார். திராவிட இயக்கம் உள்ளவரை அது நடக்காது. இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
மகளிருக்கு உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என மகளிருக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியைப் போக்கும் வகையில், குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் தான் முதலமைச்சர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதைத் தாண்டி, கனடா போன்ற பல நாடுகளும் பின்பற்றுகின்றன.