சென்னை:ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் அவரது மறைவிற்கு மதிமுக வைகோ பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் " ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், இளமைக் காலம் தொட்டு தியாக வேங்கையாக என்னோடு பயணம் செய்த அ.கணேசமூர்த்தி மறைவுச் செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன்.
சென்னை தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் அணியில் இணைந்து திமுகவை வளர்த்தெடுக்க என்னோடு பாடுபட்ட காலங்கள் பசுமையாக இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. ஆதிக்க இந்தியை வேரோடு சாய்ப்பதற்காக ஆண்டு 65இல் மாணவர் சேனை நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தில் என்னோடு களம் கண்ட வீர வேங்கைதான் சகோதரர் கணேசமூர்த்தி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மலர்ந்த நேரத்தில் திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர் என்னோடு கைகோர்த்துக் கொண்டு கழகத்தை தொடங்கவும், வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவும் முனைப்புடன் செயலாற்றிய செயல் வீரர் கணேசமூர்த்தி.
ஈரோடு மாநகரில், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களையும், அனைத்திந்தியத் தலைவர்களையும் அழைத்து எழுச்சியுடன் நடத்திய மாபெரும் மாநாடு, கழகத்தின் பொதுக்குழு கூட்டங்கள், பொதுவாழ்வில் பொன்விழா கண்ட என்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்திய மாநாடு என எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர். கொங்குச் சீமையில் திராவிட இயக்கம் வேரூன்ற அரும்பணி ஆற்றிய பெருமைக்குரியவர் கணேசமூர்த்தி.