திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து நடிகரும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலருமான வாகை சந்திரசேகர் மற்றும் பன்முக எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி இருவரும் மேலப்பாளையம் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய வாகை சந்திரசேகர், "கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சிறந்த திராவிட மாடல் ஆட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டு இருக்கிறார். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் ஆட்சிக்குவர துடிக்கிறார்கள். இனி பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏதோ ஒரு அரசியல் கட்சி 2 முறை ஆட்சி நடத்தியது, 3வது முறையாகவும் ஆட்சி நடக்கிறது என நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏனென்றால் இதுதான் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது, அப்படி அவர்கள் வந்தால் இனி நாடாளுமன்றத்திற்குத் தேர்தலே நடக்காது. ராணுவ ஆட்சியாக, சர்வாதிகார ஆட்சியாக இருக்கும். நமது சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்படும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற அளவிற்குக் கொடுமையான ஒரு முடிவுக்கு வந்தால், இத்தனை ஆண்டு காலம் கல்தோன்றி, மண் தோன்றி முன் தோன்றா மூத்த குடி தமிழுக்கு என்ன மரியாதை. தமிழிலிருந்துதான் அனைத்து மொழியும் பிரிந்தது, அப்படிப்பட்ட தமிழ் மொழியவே அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.