கோயம்புத்தூர்:பொள்ளாச்சி நகரில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது வடுகபாளையம். இப்பகுதியை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் என பல்வேறு பயன்பாடுகளுக்கும் வடுகபாளையம் வழியாக நகருக்குள் வரும் வழித்தடத்தையே பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் ரயில்கள் வருகையின் போது அடிக்கடி மூடி திறப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால், பொள்ளாட்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் முக்கிய பிரமுகர், தனியார் கல்லூரி ஒன்றிற்கு சாதகமாக மேம்பாலத்தின் வடிவமைப்பையே ரகசியமாக மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், புதுவிதமாக மேம்பாலத்தின் ஒருபுறம் ஒரே தூணுடன் சரிவாகவும், மறுபுறம் 17 தூண்களுடன் சரிவாகவும் வினோதமான முறையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது அதிகாரிகளின் தவறு என விளக்கம் கொடுக்கப்பட்டு, தவறுகள் அனைத்தும் அதிகாரிகளின் தலையில் சுமத்தப்பட்டது. அதோடு முறையான அணுகு சாலையோ அல்லது சுரங்க நடைபாதை வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை.
அப்போது மாற்றுப்பாதை இல்லாததால் பொதுமக்கள் இன்றளவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி வடுகபாளையம் பகுதியில் இருந்த ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் முடியதால், அவ்வழியே செல்லக்கூடிய 16 கிராமங்களின் சாலை துண்டிக்கப்பட்டது.