தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகை மலருக்கு உள்ள வரலாற்று தொடர்பு என்ன? சங்க கால இலக்கியங்கள் கூறுவது என்ன? - Tamil people and flowers

Tamil people and flowers: வாகை மலரை தனது கட்சிக் கொடியின் அடையாளமாக நடிகர் விஜய் காட்டியுள்ள நிலையில், மலர்களுக்கும், தமிழர்களின் வாழ்வியலுக்கும் சங்க காலத்தில் இருந்து வரும் தொடர்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

த.வெ.க கொடி புகைப்படம்
த.வெ.க கொடி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 7:38 PM IST

மதுரை:ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்வோடும், நாகரிகத்தோடும் மரம், செடி, கொடி, தாவரங்களோடு மலர்கள் பின்னிப் பிணைந்திருந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை உள்ளிட்ட ஐந்திணைகளில் வாழ்ந்த மக்கள் சூடிக் கொண்ட மலர்கள் குறித்த பதிவுகள் சங்க இலக்கியங்களில் பாடல்களாக உள்ளன. மன்னர்கள் தங்கள் குடிக்கென்று அறிவித்துக் கொண்ட மலர்களும் உண்டு.

பாண்டியருக்கு வேப்பம்பூ, சோழருக்கு ஆத்திப்பூ, சேரருக்கு பனம்பூ என அணிந்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமன்றி, தமிழ் இலக்கணங்களுள் ஒன்றான புறப்பொருள் இலக்கணம், வேந்தனின் போர் முறைகள் பற்றிக் குறிப்பிடும் போது, புறப்பொருள் திணையாக அவற்றைப் பகுத்து, ஒவ்வொரு போர்களுக்கும் மன்னன் அணியும் பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

எதிரி நாட்டின் மீது ஒரு மன்னன் போர் தொடுப்பதற்கு முன்பாக அந்நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து செல்லும் போரை முன்னெடுக்கும்போது வெட்சிப்பூவினைச் சூடுவது வழக்கம். இது வெட்சித் திணை என்று அழைக்கப்படுகிறது. கவர்ந்து செல்லப்பட்ட தன்னுடைய நாட்டின் பசுக்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக போர் தொடுக்கும் மன்னன் கரந்தைப் பூ சூடுவதை கரந்தைத் திணை என்றும், எதிரி நாட்டைக் கைப்பற்றுவதற்காகச் செல்லும்போது வஞ்சிப்பூ சூடிச் செல்வதை வஞ்சித் திணை என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மேலும், தன்னுடைய நாட்டின் மீது படையெடுத்து வரும் மன்னனை தடுத்து தனது நாட்டை காக்கச் செல்லும் அரசன் காஞ்சிப்பூ அணிவதை காஞ்சித்திணை என்றும், தனது கோட்டையை முற்றுகையிட்ட மன்னனிடமிருந்து கோட்டையை பாதுகாக்கப் போராடும் மன்னன் நொச்சிப்பூ சூடுவதை நொச்சித்திணை என்றும், கோட்டையை முற்றுகையிடும் அரசன் உழிஞைப்பூச் சூடுவதை உழிஞைத்திணை என்றும் திணைகள் பகுக்கப்பட்டிருந்தன.

அதேபோன்று, பகை அரசர்கள் இருவரும் நேருக்கு நேராக நின்று போரிடும் போது இரண்டு தரப்பாரும் தும்பைப்பூச் சூடி களத்தில் நிற்பர். இது தும்பைத்திணை எனப்படுகிறது. இந்தப் போரில் வெற்றி பெற்ற மன்னனும், அவனது வீரர்களும் அணியும் பூ தான் வாகைப்பூ என அழைக்கப்படுகிறது. இந்த அரசனை புகழ்ந்து புலவர்கள் பாடும் பாடல்கள் தான் வாகைத் திணை என்று அழைக்கப்படுகிறது.

வெற்றி பெற்ற அல்லது வெற்றி பெற வேண்டி வாழ்த்துவதற்காகப் பிறந்த ஒரு சொல்லாடல்தான் 'வாகை'. இன்றைக்கு நாம் இயல்பாகச் சொல்லி மகிழும் 'வெற்றி வாகை சூடினர்' என்பதெல்லாம் வாகைத்திணையின் மரபிலிருந்து வருவதுதான். ஆக, எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் அடையாளமாகத் திகழ்வது 'வாகை' மலரே. இந்த மலரோடு தமிழர்களுக்கு இருக்கும் நெருக்கம் சங்க காலத்திலிருந்து தற்போதைய 'விஜய்' காலம் வரை தொடர்கிறது.

இதுகுறித்து நறுங்கடம்பூ என்ற நூலின் ஆசிரியரும் தாவரவியல் ஆய்வாளருமான கார்த்திகேயன் கூறுகையில், வாகை மலரைத் தருகின்ற வாகை மரம், 'கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப' (பதிற்றுப்பத்து 66) எனும் வரியில் கடவுளாகக் கருதப்பட்டுள்ளது. 'குமரி வாகை கோல் உடை நறு வீ மட மா தோகை குடுமியின் தோன்றும்' (குறுந்தொகை 347) என்ற பாடல் வாகைப்பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும் என்கிறது.

அதுமட்டுமன்றி சங்ககால குறுநில மன்னர்களில் ஒருவனாயிருந்த நன்னன் என்பவனின் காவல் மரமாக வாகை இருந்தது என 'பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த' (பதிற்றுப்பத்து 40) என்ற பாடல் வரியின் வாயிலாக அறியலாம். அதேபோன்று கபிலர் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 மலர்களில் வாகையும் ஒன்றாகும். 'வடவனம் வாகை வான் பூ குடசம்' (குறிஞ்சிப்பாட்டு 67) என்ற பாடல் மூலம் அறியலாம்' என்கிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வாகைப்பூவுக்கு அதிகரிக்கும் மவுசு.. விஜய்க்கு வெற்றி வாகை சூடுமா வாகைப்பூ? தவெக கொடியின் மூலம் தெரிவிப்பது என்ன? - Vijay TVK Flag

ABOUT THE AUTHOR

...view details