சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.18) மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சமூக நீதிக்காக இடைவிடாது குரல் கொடுத்தவர் கருணாநிதி. வரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை புரிந்தவர். நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தை பலப்படுத்தின.
அவர் ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி அல்ல. தேசிய அளவிலான தலைவராகவே பார்க்கப்பட்டார். தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார். திரைத்துறைக்கான அவரது பங்களிப்பு தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் பண்பாட்டுத் தளத்தில் அழியாத முத்திரை பதித்துள்ளது. மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர். வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக் காத்தவர்.
நாட்டின் சமூக நீதி மற்றும் கலாச்சாரத்தில் அடையாளமாக அவர் திகழ்கிறார். தேசத்தின் நலனுக்காக பல கட்சிகளை ஒருங்கிணைத்தவர். துணிச்சல்மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். கருணாநிதி ஜனநாயக பண்புகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது.