சென்னை: 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 23ஆம் தேதி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில், பாஜக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்துக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.
முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி மற்றும் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “நிதி ஆயோக் கூட்டம் என்பது அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி பெறுகின்ற உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
மக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்திய கூட்டணியினர் பல யுக்திகளை கையாளுகின்றனர். அரசியல் நாடகத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். தமிழக மக்களுக்கு ஸ்டாலின் எப்போதும் தவறான தகவலை அளித்து வருகிறார். அவர் எப்போதும் குழப்பத்தில் இருக்கிறார். இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி.
2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ரூ.800 கோடி தான். ஆனால், இந்த பட்ஜெட்டில் மட்டும் ரயில்வே துறைக்கு ரூ.6,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 600 சதவீத அதிக நிதியை ஒதுக்கி தந்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 16 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விமானம், நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில்வே, கப்பல் உள்பட பல துறை மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.