தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சேலம் உருக்காலை விரிவாக்கம்" - மத்திய அமைச்சர் குமாரசாமி சேலத்தில் கொடுத்த அப்டேட்! - Minister Kumaraswamy to tamil nadu

சேலம் உருக்காலை ஏற்ற இறக்கத்துடன் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில் இதன் விரிவாக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேச உள்ளோம் என சேலம் வருகை வந்த மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் குமாரசாமி
மத்திய அமைச்சர் குமாரசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 9:16 PM IST

சேலம்:மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சராக குமாரசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சாலை மார்க்கமாக உருக்காலையை வந்தடைந்த குமாரசாமிக்கு உருக்காலை செயல் இயக்குனர் பாண்டே தலைமையில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட குமாரசாமி உருக்காலை வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உருக்காலையின் நிர்வாக அமைப்பு, பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எந்தெந்த பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தான விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் உருக்காலையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், “ சேலம் உருக்காலை எவ்வாறு செயல்படுகிறது, அதை எவ்விதம் மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சேலம் வந்துள்ளேன்.

இதையும் படிங்க:“என் மகனை என்கவுன்ட்டர் செஞ்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு”- வேலூர் கலெக்டரிடம் மனு கொடுத்த தாய்!

இதற்காக சேலம் உருக்காலையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சேலம் உருக்காலை குறித்து அளிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சேலம் உருக்காலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்வது குறைந்துள்ளது. அதற்கு பிறகு ஏற்ற இறக்கத்துடன் சேலம் உருக்காலை மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

சேலம் உருக்காலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், முதலீடு செய்யப்படும் பணத்தை எவ்வாறு திரும்ப எடுக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. ஒரிரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சேலத்திற்கு வருகை தந்து விரிவாக்கம் குறித்து மேலும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள முக்கிய உருக்காலைகளான சேலம், விசாகப்பட்டினம், கர்நாடகா விஸ்வேஸ்ரய்யா உருக்காலை ஆகிய மூன்று உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து பிரதமரின் வழிகாட்டுதலுடன் புதுதில்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். ஆந்திர முதலமைச்சரையும் அழைக்க உள்ளோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details