சென்னை:இந்தியாவில் சமூக வானொலியின் 20ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா பொறியியல் கல்லூரியில் மண்டல சமூக வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்பட்டது.
சமூக வானொலி நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வானொலியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு தான் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியைத் தொடங்கி கோடானுகோடி மக்களுடன் உரையாடி வருகிறார். அவர்களின் மன உணர்வுகளை அறிந்து வருகிறார். சமூக வானொலி என்பது மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறது.
மத்திய அரசின் திட்டங்களை உள்ளூர் மொழிகளில் தருகிறது. 2047-இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில் மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது. சமூக வானொலி திட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2002-ல் ஒப்புதல் அளித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2004-ம் ஆண்டு முதலாவது சமூக வானொலி அமைக்கப்பட்டது.