கன்னியாகுமரி: நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அந்தவகையில், தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் தொகுதி வாரியாக பரக்கும் படை பணியமர்த்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் 18 பறக்கும் படை சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ராஜாக்கமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணம் இல்லாமல் 1லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை ஆனந்த நகரைச் சேர்ந்த தனசேகர் என்பவரிடம் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஆரல்வாய்மொழி மொழி பகுதியில் வாகன சோதனைகளில் ஈடுபட்டபோது நாங்குநேரியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரத்து 600 ரூபாயும், பத்மநாபபுரம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 450 ரூபாயும், குளச்சல் பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏடிஎம் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 742 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.